நிலையான மற்றும் நீண்ட கால ஆதரவுக்கான தேர்வு- Windows Enterprise LTSC
Microsoft நிறுவனமானது Windows இயங்குதளத்தின் பலவிதமான பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. இவற்றில் Windows Enterprise LTSC – Long-Term Servicing Channel என்பது பாரிய நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான சூழல்களுக்காக வடிவமைக்கப்பட்ட விசேடமான பதிப்பாகும்.
LTSC என்றால் என்ன?
LTSC என்பது ‘நீண்ட காலச் சேவைக் கால்வாய்’ என்பதனைக் குறிக்கும். இதன் பிரதான நோக்கம், மென்பொருள் இற்றைப்படுத்தல்களில் (Software Updates) நிலைத்தன்மையை (Stability) பேணுவதே ஆகும்.
வழமையான வின்டோஸ் பதிப்புக்கள் (GAC – General Availability Channel) குறைந்த கால இடைவெளிகளில் புதிய இயல்புகளையும் (Features) மாற்றங்களையும் பெறும். ஆனால், LTSC பதிப்பில், புதிய இயல்பு இற்றைப்படுத்தல்கள் (Feature Updates) பல வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
Windows LTSC இன் பிரதான இயல்புகள்
- குறைந்தபட்ச இற்றைப்படுத்தல்கள்: எல்.ரி.எஸ்.சி-இல் புதிய இயல்புகள் எதுவும் வருவதில்லை. இதனால், நிறுவனங்கள் தமது மென்பொருள் மற்றும் வன்பொருள் சூழலில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
- நீண்ட கால ஆதரவு: இந்தப் பதிப்பிற்கு நீண்ட கால ஆதரவு (சாதாரணமாக 5 வருடங்கள்) வழங்கப்படுகிறது. முக்கியமான வேலைகளைச் செய்யும் இயந்திரங்கள், மருத்துவ உபகரணங்கள், தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்புக்கள் (Industrial Control Systems), எ.ரி.எம் (ATM) இயந்திரங்கள் போன்ற நிலையான இயங்குதளம் அத்தியாவசியமான சாதனங்களுக்கு இது மிகச் சிறந்ததாகும்.
- அத்தியாவசிய மாதாந்தர தர இற்றைப்படுத்தல்கள் (Monthly Quality Updates): புதிய இயல்புகள் இல்லாவிட்டாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் செயற்பாட்டுத் திறனுக்காகவும் மைக்ரோசோவ்ற் ஒவ்வொரு மாதமும் “தர இற்றைப்படுத்தல்களை” வழங்குகின்றது. இவை LTSC-இன் கட்டாயமான பகுதியாகும்.
- பாதுகாப்புக் குறைபாடுகளைச் சீர்செய்தல் (Security Patches): வின்டோஸில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் அல்லது ஓட்டைகளைச் சரிசெய்வது. இது உங்கள் கணினியை Viruses, Malware மற்றும் Hacking தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
- குறைபாடுகளைச் சீர்செய்தல் (Bug Fixes): இயங்குதளத்தின் செயற்பாட்டில் உள்ள சிறிய பிழைகள், மென்பொருள் திடீரென இயங்குவதை நிறுத்துதல், மெதுவாகச் செயற்படுதல் போன்ற சிக்கல்களைச் சீர்செய்து, இயங்குதளத்தை நிலைப்படுத்துகிறது.
- செயற்பாட்டுத் திறன் மேம்பாடுகள் (Performance Improvements): கணினியின் ஒட்டுமொத்த நிலைத்தன்மையையும் வேகத்தையும் அதிகரிக்கச் செய்வது.
சுருக்கமாக, இந்த “மாதாந்தரத் தர இற்றைப்படுத்தல்கள்” உங்கள் LTSC இயங்குதளத்தை நிலையாகவும், பாதுகாப்பாகவும், திறமையாகவும் இயங்க வைப்பதற்காக ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் அத்தியாவசியத் திருத்தங்கள் ஆகும்.
- தேவையற்ற இயல்புகள் நீக்கம்: Windows Store, Microsoft Edge (as an app), and many other in-box செயலிகள் பொதுவாக LTSC பதிப்பில் இருக்காது. இதனால், இயங்குதளம் இலகுவாக (Lightweight) இருப்பதுடன், தேவையற்ற பின்னணிச் செயற்பாடுகளையும் குறைக்கிறது.
- மேம்படுத்தப்பட்ட நிர்வாகம்: இது Enterprise பதிப்பின் அனைத்து மேம்பட்ட பாதுகாப்பு, நிர்வாகம் மற்றும் விநியோகித்தல் (Deployment) இயல்புகளையும் உள்ளடக்கியுள்ளது.
Windows Enterprise LTSC என்பது, தொடர்ச்சியான இயல்பு இற்றைப்படுத்தல் இடையூறின்றி, மிக உயரிய நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும், நீண்ட கால ஆதரவையும் எதிர்பார்க்கும் நிறுவனங்களுக்கான Windows பதிப்பாகும். முக்கியமானதும் நிலையான செயற்பாடு தேவையானதுமான சாதனங்களுக்கு இதுவே பொருத்தமான தேர்வாக அமைகிறது.